Wellways என்பது விக்டோரியா, நியூ ஸவுத் வேல்ஸ், டாஸ்மேனியா, குவீன்ஸ்லாந்து மாநிலங்களிலும் மற்றும் அவுஸ்திரேலியத் தலைநகர எல்லைப்பகுதியிலும் சேவைகளை வழங்கும் மன நல மற்றும் உடலியலாமை ஆதரவுதவி அமைப்பாகும். மன நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் சமூகங்களுக்குமான சேவைகள், தகவல்கள் மற்றும் ஆதரவுதவிகளை மேம்படுத்துவதற்காக ஆதரவு தெரிவித்துவந்த குடும்பங்களினால் 1978 - ஆம் ஆண்டில் எமது அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

மன நலப் பிரச்சினைகள் அல்லது உடலியலாமைகள் உள்ளவர்கள், அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கவனிப்பாளர்களுடன் நாங்கள் இணைவாய்ச் செயலாற்றுகிறோம். பலவகைப்பட்ட வெவ்வேறு கலாசாரப் பின்புலங்களைச் சேர்ந்த சனங்களை இது உள்ளடக்கும். 

எமது சேவைகளும் திட்டங்களும் சமூகங்களில் மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு பொது மருத்துவர்கள், மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்களுடன் நாங்கள் பங்குபற்றுகிறோம். தம்முடைய தேவைகளையும் குறிக்கோள்களையும் தாமே அடையாளம் காண்பித்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நாங்கள் சனங்களுக்கு உதவுகிறோம். வீட்டைப் பராமரிப்பது, வேலை ஒன்றைக் கண்டெடுத்து அதைத் தக்கவத்துக் கொள்வது, தமது சமூகத்தின் அங்கமாக இருப்பது மற்றும் வாழ்க்கைத் துணை உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது ஆகியன இதில் உள்ளடங்கலாம். இது நமது இடம் என்ற எண்ணத்தினை உருவாக்கக் கூடிய வரவேற்கும் தன்மை வாய்ந்த சமூகங்களை உருவாக்குவது எமது நோக்கம். 

உங்களது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உங்களது சமூகத்த்திலுள்ள உங்களது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கூட மன நலப் பிரச்சினைகள் மற்றும் உடலியலாமையைப் பற்றிப் பேசுவது சிரமம் என்பதை நாங்கள் உணர்கிறோம். உங்களுக்குத் தேவைப்படும் உதவியும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்காமல் போகக்கூடும் என்பது இதன் பொருள். 

நீங்கள் குணமடைந்து, நலமாக வாழ்வதற்கு  உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை விளங்கிக்கொள்ளும் பொருட்டு Wellways -சேவையில் உள்ள நாங்கள் உங்களுடன் சேர்ந்து இணைவாய்ப் பணியாற்றுவோம். உங்களுக்கேற்ற சரியான மூலவளங்களை எம்மால் உங்களுக்கு அளிக்க இயலும். உங்களுடைய தாய் மொழியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் திட்டங்கள், அல்லது உங்களுடையதைப் போன்ற ஒரே மாதிரியான அனுபவங்கள் உள்ள மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருவது ஆகியன இதில் உள்ளடங்கக்கூடும்.

ஒரு அங்கத்தவர் அல்லது சுயவிருப்புத் தொண்டர் என்ற முறையிலும் எமது அமைப்புடன் ஈடுபாடு கொண்டு மற்றவர்களுக்காக நேர்முகமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் நீங்கள் பங்காற்றலாம். 

உங்களது தேவைகள் என்ன மற்றும் உங்களது உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கும் உதவிகள் யாவை என்பதைப் பற்றி எம்முடன் மேலதிகமாப் பேச எமது உதவி இணைப்பு மூலம் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவை என்றால், இந்த இடத்தில் சொடுக்குவதன் மூலம் நீங்கள் ஒருவரைப் பெறலாம்.